search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிக கதை"

    • ‘நான்’, ‘என்னுடையது’ என்பதெல்லாம் அகந்தையின் உருவம்.
    • ‘எல்லாமே இறைவனுடையது’ என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது.

    பாண்டவர்களும், கவுரவர்களும் ஒன்றாக இருந்த காலகட்டம் அது. தன் உறவுகள் கூடியிருந்த அஸ்தினாபுரத்திற்கு வருகை தந்திருந்தார், கிருஷ்ணன். அவரை நகரின் எல்லைக்கே சென்று அழைத்து வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர். அதனால் அஸ்தினாபுரத்தை நிறுவியவரான பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பல போர் பயிற்சிகளை வழங்கிய துரோணர், அவரது மகன் அஸ்வத்தாமன், கிருபர், விதுரர் என பெருந்தலைகள் பலரும் சென்று கண்ணனை வரவேற்று அழைத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர்.

    கிருஷ்ணரை வரவேற்பதற்காக வீதி நெடுகிலும் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் நின்று பூக்கள் தூவி வரவேற்றனர். பெண்கள் பலரும் கண்ணனுக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தினர். வரும் வழியிலேயே பீஷ்மர், கண்ணனிடம் "நீங்கள் தங்க ஏதுவான இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு விருப்பமான இடம் எது என்று சொன்னால் அதை தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

    அப்போது கண்ணபிரான், தன் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டி "பச்சை வர்ணம் பூசப்பட்டு, பிரளய காலத்தில் நீரில் மிதந்து வரும் ஆல் இலை போல நிற்கிறதே. அது யாருடைய வீடு?" என்றார்.

    "இறைவா. அது என்னுடைய வீடு" என்று துரோணரிடம் இருந்து பதில் வந்தது.

    கண்ணன் அடுத்ததாக ஒரு கட்டிடத்தை நோக்கி கைநீட்டி, "சிவப்பு நிறம் பூசப்பட்டு, செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

    இப்போது கிருபர் பதில் கூறினார். "மாதவா.. அது என்னுடைய வீடு"

    கண்ணன் மறுபடியும் ஒரு கட்டிடத்தை நோக்கி, "மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, மகாமேரு குன்று போல நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

    அஸ்தினாபுரத்தின் பிதாமகனான பீஷ்மர், "அச்சுதா.. அது என்னுடைய வீடு. அதில் நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம்" என்றார்.

    அதையும் தாண்டிச் சென்ற கண்ணன், "நீல நிறத்தில் கடல் போன்று நீண்டு விரிந்து காட்சியளிக்கும் இது யாருடைய வீடு?" என்று கேட்டார்.

    அதற்கு துரோணரின் மகனான அஸ்வத்தாமன், "பரம்பொருளே, அது என்னுடைய வீடு" என்று பதிலளித்தான்.

    கண்ணன் புன்னகையோடே மீண்டும் நடக்கத் தொடங்கினார். அப்போது அவர் கண்ணின் மற்றொரு கட்டிடம் தென்பட்டது. "சிறிய அளவில் வெள்ளை நிறத்தோடு, பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் சாத்வீகம் பொருந்தி நிற்கும் இது யாருடைய வீடு?" என்றார்.

    "அன்புக்குரிய கடவுளே.. அது உன்னுடைய வீடு" என்று விதுரரிடம் இருந்து பதில் வந்தது.

    "என்னுடைய வீடா?.. அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று நினைத்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது, நான் எதற்காக பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றோரது வீடுகளில் போய் தங்க வேண்டும். நான் என் வீட்டிற்குப் போகிறேன்" என்றபடி, விதுரரின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணன்.

    'நான்', 'என்னுடையது' என்பதெல்லாம் அகந்தையின் உருவம். 'எல்லாமே இறைவனுடையது' என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது. அந்த ஆணவத்தை அழிக்கும் மனதையே, இறைவன் எப்போதும் விரும்புகிறான். அந்த மனதிற்குள் குடிபுகவே அவன் நினைக்கிறான்.

    • சில தகாத காரியங்களைச் செய்யும் போது, புத்தி தடுமாறி உடலுக்குள் விபத்து ஏற்பட்டுவிடும்.
    • மதுவால் வாழ்வை தடம் புரளும் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

    அந்த நாட்டிற்கு, சக்தி வாய்ந்த குரு ஒருவர் வருகை தந்திருந்தார். வனப் பகுதியோரம் குடில் அமைத்து தங்கியிருந்த அவரை, பலரும் சந்தித்து தங்களின் துயரங்களைச் சொல்லி, தீர்வு கண்டு வந்தனர். குருவைப் பற்றி கேள்விபட்ட, அந்த நாட்டு மன்னனும், தன்னுடைய குடும்ப சகிதமாக, அவரைப் பார்ப்பதற்காகச் சென்றார்.

    மன்னனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உரிய மரியாதையை அளித்த குரு, அவர்களின் கேள்விகளுக்கு தக்க பதிலையும் வழங்கினார். அதில் மன்னனுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டது. குருவை நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக தன்னுடன் அரண்மனையில் வந்து சில நாட்கள் தங்கியிருந்து, தன்னுடைய ஆட்சிக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று, குருவிடம் வேண்டுகோள் விடுத்தார். குருவும் சம்மதம் தெரிவித்து, மன்னனுடன் அரண்மனைக்கு புறப்பட்டார்.

    அது 5 குதிரைகள் பூட்டப்பட்ட, மேற்கூரை வேயப்பட்ட பிரமாண்டமான தேர். அந்த தேருடன், மற்றொரு தேரும் இணைக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக இருந்த இணைப்புத் தேரில் மன்னர் குடும்பத்து பெண்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தனர். முதல் தேரில், மன்னர், அவரது பிரதான உதவியாளர், முதன்மை அமைச்சர்கள் இருவர், படைத் தளபதி மற்றும் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோருடன் குருவும் இருந்தார்.

    பயண தூரம் 5 மணி நேரத்தை தாண்டும் என்பதால், அனைவரும் உற்சாகமாகப் பேசிக்கொண்டே வந்தனர். அப்போது மன்னரின் ஆணைப்படி, அவரது உதவியாளர் அனைவருக்கும் சோமபானம் ஊற்றிக் கொடுத்தார். அனைவரும் அதைப் பெற்றுக்கொண்டனர். இறுதியாக குருவிற்கும், சோமபானத்தை ஊற்றிக் கொடுத்தார், அந்த உதவியாளர். ஆனால் அதை ஏற்க குரு மறுத்துவிட்டார்.

    இதனைக் கண்ட அரண்மனை முக்கியஸ்தர்கள் அனைவரும், "குருவே.. இது எங்கள் அரச குடும்பத்து மரபு. எங்களின் விருந்தாளிக்கு, உயர்ந்த வகையான சோமபானத்தை அளிப்போம். அப்படித்தான் இதை உங்களுக்கு வழங்குகிறோம். மறுக்காதீர்கள்" என்றனர்.

    ஆனால் குரு, "நான் ஒரு சிந்தனையாளன். நான் மது பருகுவது இல்லை" என்றார்.

    இப்போது மன்னர், "குருவே.. எனக்காக ஒரு துளியாவது பருகுங்கள். அப்படி நீங்கள் பருகிவிட்டால், உங்களாலேயே அதை விட முடியாது" என்று கூறினார்.

    ஆனால் குருவோ, "நீங்கள் என்னை மிகவும் வற்புறுத்துகிறீர்கள். எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இருந்தாலும் என்னுடைய சார்பில் இந்த சோமபானத்தை, குதிரைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து தேரை செலுத்திக் கொண்டிருக்கும் தேரோட்டியிடம் கொடுத்துவிடுங்கள்" என்றார்.

    அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். "ஐய்யய்யோ.. தேரை ஓட்டும் பணியில் இருக்கும் பணியாளரிடம், இந்த உயர்ந்த வகை சோமபானத்தை கொடுத்தால், அதைக்குடிக்கும் அவனது புத்தி தடுமாறி, குதிரையின் வேகத்தை அதிகரிக்கிறேன் என்று தேரை தறிகெட்டு ஓட்டிவிட்டால், நம் அனைவருடைய உயிருக்கும் அது ஆபத்தாக அமைந்துவிடும். அதனால் தேரோட்டிக்கு சோமபானத்தை அளிப்பது சாத்தியமில்லை" என்று பதறிப் போய் சொன்னார், மன்னர்.

    இப்போது முகத்தில் மெல்லிய புன்னகையை தவழ விட்ட குரு, "சரியாக சொன்னீர்கள் மன்னா.. நம்முடைய வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான். சில தகாத காரியங்களைச் செய்யும் போது, புத்தி தடுமாறி உடலுக்குள் விபத்து ஏற்பட்டுவிடும்" என்றார்.

    குருவின் உபதேசத்தில் இருந்த உண்மையை உணர்ந்த மன்னன், 'இனிமேல் சோமபானம் அருந்துவதில்லை' என்று முடிவெடுத்தான்.

    சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அவல நிலையை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    கயிலாயம் சிவபெருமானின் இருப்பிடம். பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலான தேவர்கள், ரிஷிகள் அனைவரும் இங்கு வந்துதான் ஈசனை வழிபடுவார்கள். அவர்கள் அப்படி ஈசனை வழிபடும்போது, சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு, ‘நம்மைதான் அனைவரும் வழிபடுகிறார்கள்’ என்று நினைத்து அகந்தை கொண்டதாம்.

    ஒருநாள் மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனின் மீது ஏறி, சிவபெருமானை தரிசிக்க வந்திருந்தார். கருடனைப் பார்த்த பாம்பு, “என்ன கருடா.. சவுக்கியமாக இருக்கிறாயா?” என்று அகந்தையோடு கேட்டது.

    கருடனுக்கும் பாம்புக்கும் பகை என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் தற்போது பாம்பு இருக்கும் இடம், சிவபெருமானின் கழுத்து ஆயிற்றே. கருடனால் என்ன செய்ய முடியும்.. கருடன் அமைதியாக பதில் கூறியது, “அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால், எல்லோரும் சவுக்கியம்தான்.”

    பாம்பின் அகந்தையை சிவபெருமான் அறிந்தார். இறைவன் இருக்கும் இடத்தில் அகந்தைக்கு இடம் கிடையாது. அப்படியிருக்க அகந்தை கொண்ட பாம்பு மட்டும் இறைவனுடன் இருக்க முடியுமா என்ன?

    சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் இருந்த பாம்பை எடுத்து, வேகமாக சுழற்றி தொலைவில் வீசி எறிந்தார். விழுந்த வேகத்தில் அதன் உடலில் பெருத்த காயங்கள் உண்டானது. அதன் தலை ஆயிரம் சுக்கலாக நொறுங்கியது. ஆனாலும் இதுவரை ஈசனின் கழுத்தில் இருந்த காரணத்தால் அது இறக்கவில்லை. துன்பத்தில் உழன்று கொண்டிருந்தது.

    ‘நான் என்ன தவறு செய்தேன்’ என்று நினைக்கும்போதுதான், பாம்புக்கு தான் கொண்ட அகந்தை நினைவுக்கு வந்தது. அதனால் மிகவும் வருந்தியது.

    ஒருநாள் அந்த வழியாக வந்த நாரத முனிவர், அந்தப் பாம்பை கவனித்து விட்டார். “என்னாயிற்று உனக்கு.. சிவனின் கழுத்தில் இருக்க வேண்டிய நீ.. எதற்காக இப்படி காயங்களுடன் தரையில் விழுந்து கிடக்கிறாய்? உனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது?” என்று கேட்டார்.

    பாம்பு தனக்கு ஏற்பட்ட கதியை, நாரதரிடம் கூறி வருந்தியது. “எனது பிழையை நான் உணர்ந்துவிட்டேன். இழந்த சிறப்பை நான் மீண்டும் பெற்று, சிவபெருமானை அடைய தாங்கள்தான் எனக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும்” என்று நாதரரைப் பணிந்து பிரார்த்தித்தது.

    தன்னை சரணடைந்த பாம்பின் மீது, நாரதருக்கு இரக்கம் உண்டானது. அவர் “நான் உனக்கு விநாயகர் மந்திரம் உபதேசிக்கிறேன். அதைச் சிரத்தையுடன் சொல்லிக்கொண்டே இரு. விநாயகரின் திருவருளால் உனக்கு நன்மை ஏற்படும்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

    நாரதர் உபதேசித்த விநாயகர் மந்திரத்தை, அந்த பாம்பு சிரத்தையுடன் சொல்லி வந்தது. அந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்து போன விநாயகர் அங்கு தோன்றினார். விநாயகரிடம் தன்னுடைய நிலையை எடுத்துரைத்த பாம்பு, மீண்டும் தான் சிவபெருமானை அடைய அருளும்படி கேட்டுக்கொண்டது.

    அதற்கு விநாயகர், “எனது அருளால் உனக்கு பழைய உடல் ஆரோக்கியம் கிடைக்கும். மீண்டும் சிவபெருமானின் கழுத்தில் நீ ஆபரணமாக இருக்கும் உயர்ந்த நிலையை அடை வாய். ஆயிரம் சுக்கல்களாக சிதறிய உன் தலை, ஆயிரம் தலைகளாக மாறி, விஷ்ணுவின் பாம்பணையாக இருக்கும் பாக்கியமும் உனக்கு கிடைக்கும். அதோடு எனது இடுப்பிலும் நாகாபரணமாக இருக்கும் பேறும் உனக்கு அருளினோம்” என்று கூறி மறைந்தார்.

    சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தங்களது நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் அந்த பாம்பு போன்றே, அவல நிலையை சந்திக்க நேரிடும். பதவியில் இருக்கும் ஒருவர் நேர்மையுடன் நடந்தால், அந்த நேர்மையே அவரைக் காக்கும். பதவியும், பணமும் வரும் போது அதோடு அகந்தையும் வந்துவிடுகிறது. அந்த அகந்தை உங்களை தொடராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அழிவே மிஞ்சும்.
    ×